Offline
கார் பூத்தில் காவலாளியின் சடலம்; நடந்து என்ன? – போலீஸ் விசாரணை
News
Published on 09/19/2024

டில்லிராணி முத்து

சபாக் பெர்ணம், தாமான் பெர்த்தாமா, ஜாலான் பாசிர் சாலையோரத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் பூத்தில் கொலையுண்டவர் என நம்பப்படும் ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டன்ட் ரோபின் குஹா தகூர்த்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து 16.9.3024 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 6.04 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகளிடமிருந்து போலீசுக்கு ஓர் அழைப்பு கிடைக்கப்பெற்றதாக அவர் கூறினார்.

ஜாலான் பாசிர் சாலையோரத்தில் சந்தேகிக்கும்படி நிறுத்தப்பட்டிருந்த கறுப்பு நிற புரோட்டோன் சாகா ரக காரை போலீஸார் சோதனை செய்தபோது அக்காரின் பூத்தில் ஆடவர் ஒருவர் சுயநினைவின்றி இருப்பது தெரியவந்தது.

போலீஸ் முதல் கட்ட விசாரணையில் கார் பூத்தில் இறந்த கிடந்த அவ்வாடவர் 43 வயது மலாய்க்காரர் என்றும் அவர் சபாக் பெர்ணம் மாவட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்தவர் என்றும் தெரிய வந்தது.

சிலாங்கூர் மாநில போலீஸ் தலைமையக தடயவியல் இலாகா அதிகாரிகள் இக்கொலை சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி அவ்வாடவரின் மரணத்தில் குற்றவியல் அம்சங்கள் நிகழ்ந்திருப்பதை உறுதிப்படுத்தியதாக சூப்பிரிண்டெண்டன்ட் ரோபின் குஹா குறிப்பிட்டார்.

சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவு, குற்றவியல் சட்டம் பிரிவு 302 கீழ் புலன்விசாரணையை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், இவ்விசாரணைக்கு மேலும் உதவும் வகையில் சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை 03-32242222 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு தெரியப்படுத்தலாம் என்றும் சூப்பிரிண்டெண்டன்ட் ரோபின் குஹா கூறினார்.

இக்கொலையில் சம்பந்தப்பட்ட ஒரு நபரை போலீஸ் தேடி வருகிறது என்றும் நம்பப்படுகிறது.

 

Comments