அலோர் ஸ்டார்:
இன்று காலை 9 மணி நிலவரப்படி, கெடா மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மொத்தம் 982 குடும்பங்களைச் சேர்ந்த 3,464 பேர் அங்குள்ள 28 தற்காலிக நிவாரண மையங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கெடா சமூக நலத் துறையின் வெள்ளத் தகவல் இணையத்தளத்தின் அடிப்படையில், கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இங்குள்ள 8 நிவாரண மையங்களில் மொத்தம் 342 குடும்பங்களைச் சேர்ந்த 1,205 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பண்டார் பாரு மாவட்டத்தில் நேற்று திறக்கப்பட்ட ஒரு PPS இல் 25 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அது தெரிவித்துள்ளது.
மேலும் குபாங் பாசுவில், 214 குடும்பங்களைச் சேர்ந்த 704 பேர் இன்னும் கடந்த திங்கட்கிழமை முதல் திறக்கப்பட்ட 7 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவைதவிர, பெந்தோங் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 108 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 429 பேர் அங்குள்ள மூன்று நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர், அதே சமயம் 213 குடும்பங்களைச் சேர்ந்த 773 பேர் போக்கோக் சேனா மாவட்டத்தில் மூன்று நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கோலா முடா மாவட்டத்தில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதேநேரம் கூலிம் மாவட்டத்தில், மூன்று பிபிஎஸ்ஸில் 26 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, மாநிலத்தில் உள்ள ஏழு ஆறுகளின் நீர் மட்டம் அபாய அளவைக் கடந்துள்ளன.