Offline
சீனாவில் கத்திக்குத்துக்கு ஆளான ஜப்பானியச் சிறுவன் மரணம்
News
Published on 09/20/2024

ஷென்சன்:

சீனாவின் ‌ஷென்சன் நகரில் ஜப்பானியப் பள்ளியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் சிகிசசை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் நேற்று (செப்டம்பர் 18) நிகழ்ந்ததாக ஜப்பானிய அரசாங்கம் இத்தகவல்களை வெளியிட்டது.

புதன்கிழமை காலை சிறுவன் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார். சுமார் எட்டு மணிக்கு 44 வயது ஆடவர் ஒருவர் சிறுவனைக் கத்தியால் குத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆடவர், சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார் என்று சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை (செப்டம்பர் 19) அதிகாலை தாக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்ததாக ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் யோக்கோ காமிக்காவா செய்தியாளர்களிடம் கூறினார்.

“அச்சம்பவம் குறித்து நான் மிகுந்த அக்கறை கொள்கிறேன்,” என்றார் திருவாட்டி காமிக்காவா. “இத்தகைய சம்பவம் எந்த நாட்டிலும் நடக்கக்கூடாது. அதிலும், பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த பிள்ளையிடம் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதை எண்ணி நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்,” என்றும் அவர் சொன்னார்.

சம்பவம் தொடர்பான முழு விவரங்களை அளிக்குமாறும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜப்பான், சீனாவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக காமிக்காவா குறிப்பிட்டார்.

மாண்ட சிறுவன் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை இருநாட்டு அதிகாரிகளும் வெளியிடவில்லை. அதேவேளை, ‌ஷென்சன் ஜப்பானியப் பள்ளி, ஜப்பானிய சிறுவர்களுக்கானது என்று அதன் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments