Offline
மியான்மர் உள்நாட்டு போர்; 3 கோடி மக்கள் வெளியேற்றம்
News
Published on 09/20/2024

நைப்பியதோ: மியான்மரில் நீடிக்கும் உள்நாட்டு போரால், மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து உள்ளதாக ஐ.நா., சபை தெரிவித்துள்ளது.

நம் அண்டை நாடான மியான்மரில், அந்நாட்டு ராணுவத்திற்கும், பூர்வகுடிகளான காரேன் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இதன் காரணமாக அங்குள்ள மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதுகுறித்து ஐ.நா., சபையின் மனித உரிமைகள் கமிஷன் வெளியிட்ட அறிக்கை:

மியான்மரின் ராஹின் மாகாணம் உட்பட பல்வேறு மாகாணங்களில் வசிக்கும் மக்கள், பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாகின்றனர்.

அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. இதன் காரணமாக, பாதிக்கும் மேற்பட்ட மக்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி முதல் இதுவரை 5,350 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

அவ்வாறு, அகதிகளாக சென்ற மக்களின் நிலை பற்றி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments