ரயன் ரவின் ராஜ் உட்பட மலேசிய விளையாட்டாளர்கள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை!
கடந்த 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை இந்தியாவின் டில்லியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் ஆசிய பசிபிக் போச்சே, பவுலிங் ஆகிய போட்டிகளில் மலேசிய அணி தங்கள் அசாத்திய திறமைகளைக் காட்டி மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டி நரம்பியல் வேறுபாட்டுடன் (Level 3) வாழும் மாற்றுத் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட முக்கியமான மேடை ஆகும்.
அதில் போச்சே போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரயன் ரவின் ராஜ், பெண்கள் ஒற்றையர் பிரிவில் யாப் விண் மொய், ஆண்கள் இரட்டையர் பிரிவில் முகமது ஆதம் டானியாலா, ரயன் ரவின் ராஜ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வழங்கி தங்கம் வென்றனர்.
பவுலிங் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் யாப் பீ ஹுவா, கலந்து விளையாடும் அணியில் யாப் பீ ஹுவா, சிதி நூர் ஐஷா, முகமது நஸ்மி, கீ சி செங் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
தொடர்ந்து, 2025 சிறப்பு ஒலிம்பிக் ஆசிய பசிபிக் பிராந்திய பேட்மிண்டன் போட்டி மலேசியாவில் நடத்தப்படும். இந்தப் பொறுப்பை இந்தியா பெருமையுடன் மலேசியாவுக்கு ஒப்படைத்தது. அதனை மலேசியாவின் துணை உயர் ஆணையர் சரிபா எஸ்னீதா வஃபா ஏற்றுக்கொண்டார்.
மலேசிய வீரர்களின் வெற்றியை நாம் பெருமையுடன் பாராட்டுகிறோம். 2025இல் மலேசியாவில் நடைபெறும் போட்டியை பெரும் உற்சாகத்துடன் எதிர்நோக்குகிறோம் என சரிபா தெரிவித்துக்கொண்டார்.