வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் தொழிற்சாலைகளில் குடிநுழைவுத்துறை சோதனை; 56 பேர் கைது
கோலாலம்பூர்:
வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் மரம் மற்றும் பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திச் தொழிற்சாலைகளில் மலேசிய குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் 56 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமது துறைக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, ஜனவரி 13 அன்று நடத்தப்பட்ட சோதனையின் போது 82 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் 7 உள்ளூர்வாசிகள் சோதனை செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் டத்தோ ஜகாரியா ஷபான் தெரிவித்தார்.
இதில் குடிநுழைவு விதிமுறைகளை மீறிய இந்தோனேசியாவைச் சேர்ந்த 3 ஆண்கள் மற்றும் 4 பெண்கள், மியன்மாரை சேர்ந்த 27 ஆண்கள் மற்றும் 11 பெண்கள், வங்காளதேசத்தைச் சேர்ந்த 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண், தாய்லாந்தைச் சேர்ந்த 4 பெண்கள், சீனாவைச் சேர்ந்த ஒரு ஆண் முதலாளி என 56 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
குடிநுழைவுச் சட்டம் 1959/63 மற்றும் குடிநுழைவு விதிமுறைகள் 1963 ஆகியவற்றின் கீழ் விதி மீறல்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் புக்கிட் ஜாலில் குடிநுழைவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
அதேநேரம் வெளிநாட்டினரை முறையற்ற வகையில் வேலைக்கு அமர்த்திய மலேசியர்களுக்கு மேலதிக விசாரணைக்காக ஐந்து சம்மன்கள் அனுப்பப்பட்டதாகவும் ஜகாரியா மேலும் கூறினார்.