Offline
கவுதமலா: பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு
Published on 02/13/2025 03:28
News

கவுதமலாசிட்டி,மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமலாவில் நேற்று முன் தினம் பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த அந்த பஸ், சாலையோர தடுப்பின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தது.

விபத்துக்குள்ளான பஸ் பாலத்தில் இருந்து கவிழ்ந்து கழிவுநீரால் மாசுபட்ட ஆற்றில் விழுந்ததாகவும், 70-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பஸ் இடிபாடுகளில் இருந்து 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் மீட்புக்குழு தெரிவித்திருந்தது.

விபத்துக்குள்ளான பஸ், எல் ப்ரோக்ரெசோவில் உள்ள சான் அகஸ்டின் அகாசாகுவாஸ்ட்லான் நகரத்திலிருந்து குவாட்டமலா நகரத்திற்கு வடகிழக்கில் சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பஸ் பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கவுதமலாவில் ஒரு நாள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments