Offline
சிங்கப்பூரில் அமேசானின் 2வது அலுவலகம்
Published on 02/13/2025 03:32
News

உலகின் பிரபலமான நிறுவனமான அமேசான், அதன் இரண்டாவது அலுவலகத்தை புதன்கிழமை (பிப்ரவரி 12) சிங்கப்பூரில் திறந்துள்ளது. மத்திய வர்த்தக வட்டாரத்தில் அமைந்துள்ள அந்த அலுவலகம் ஆசிய பசிபிக் வட்டார கணினி தலைமையகமாகச் செயல்படும்.

புதிய அமேசான் வெப் சர்வீசஸ் ஆசிய பசிபிக் நிலையம், ஐஒஐ சென்ட்ரல் பொலிவார்ட் டவர்சில் இடம்பெற்றுள்ளது. அது எட்டு மாடிகளுடன் 360,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. அங்கு உள்ளூர், வட்டாரக் குழுக்களுடன் 3,000 ஊழியர்கள் வரை பணியாற்ற முடியும்.

அமேசானின் இதர அலுவலகம் சிங்கப்பூரின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் 2021ல் தொடங்கப்பட்டது. மரினா பே-யில் உள்ள ஏஷியா ஸ்கொயரில் மூன்று மாடிகளில் 100,000 சதுர அடிக்கு மேல் அது பரந்துள்ளது. இங்கு 700 ஊழியர்கள் வரை பணி செய்ய முடியும்.

தொழில்நுட்ப முன்னணி நிறுவனமான அமேசான், 2024 மே மாதம் சிங்கப்பூரின் மேகக் கணினி உள்கட்டமைப்பில் 2024 முதல் 2028 வரை 12 பில்லியன் வெள்ளி (US$8.8 பில்லியன்) முதலீடு செய்யப் போவதாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போதைய முதலீடு, முந்தைய முதலீட்டு உறுதியையும் சேர்த்து, சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 23.7 பில்லியன் வெள்ளி பங்களிப்பை 2028ஆம் ஆண்டுவாக்கில் வழங்கும் என்று அமேசான் தெரிவித்தது.

ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் வர்த்தகங்களில் 12,300 முழுநேரத்துக்கு ஈடான வேலைகளுக்கு அது ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க நிறுவனமான அமேசானின் சிங்கப்பூர் அலுவலகத்தில் 2,500 பேர் வேலை செய்கின்றனர். மேகக் கணினி, சில்லறை, தொழில்நுட்பம் உள்ளிட்டவை இதில் அடங்கும் என்று சிஎன்ஏ தகவல் தெரிவிக்கிறது.

“இந்த முதலீடும், வட்டார முழுவதும் எங்களின் முந்தைய திட்டமிடப்பட்ட முதலீடுகளும் சிங்கப்பூர் மீதான எங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன. இவ்வட்டாரத்தின் தொழில்நுட்ப மையமாகவும் சிங்கப்பூர் விளங்குகிறது,” என்று ஆசியானின் அமேசான் வெப் சர்வீசசின் நிர்வாக இயக்குநர் ஜெஃப் ஜான்சன் தெரிவித்தார்.

Comments