நேபிடாவ்,மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலில் 7.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் 2-வது பெரிய நகரமாக விளங்கும் மண்டலே நகரில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் மியான்மரை உலுக்கி எடுத்தது
பல அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தன. ஏராளமானவர்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். சாலைகள், பாலங்கள் சேதம் அடைந்து போக்குவரத்து முடங்கியது. நாட்டின் முக்கிய அணை, பழமையான அரண்மனை, விமான நிலையங்களும் சேதங்களை எதிர்கொண்டன. முதல் நாளில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் மறுநாள் பலி எண்ணிக்கை 1600-ஐ கடந்தது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்திலும் எதிரொலித்தது. தலைநகர் பாங்காக்கில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், 17 பேர் மறுநாள் பிணமாக மீட்கப்பட்டனர். நேற்று பலி எண்ணிக்கை 18 ஆனது. மேலும் 33 பேர் காயமடைந்ததாகவும், 78 பேர் காணாமல் போனதாகவும் தகவல்கள் வெளியானது.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஆட்டம் கண்டதால் உச்சியில் இருந்த நீச்சல்குளம் உடைந்து தண்ணீர் அருவி போல கொட்டிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலானது. இந்தியாவிலும் மேற்குவங்காளம், மணிப்பூர், மேகாலயாவில் லேசான நிலநடுக்க அதிர்வுகளை உணர முடிந்தது.
மியான்மரில் ராணுவ ஆட்சியால் மக்கள் திண்டாடி வந்த நிலையில், நிலநடுக்கமும் அவர்களை உலுக்கியதால், உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை அறிவித்தன. இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீட்பு குழுவினரையும், நிவாரண பொருட்களையும் அனுப்பி வைத்தது. இதற்கிடையே மியான்மரில் மீண்டும் மீண்டும் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானது.