கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பிறந்த ரவிகுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள சினிமாக்களில் நடித்துள்ளார். தமிழில் இவரது முதல் படம் ‘அவர்கள்’, இந்த படத்தில் ரஜினி, கமல் இருவருக்கும் இணையாக அதாவது மூன்றாவது ஹீரோவாக நடித்திருந்தார். தொடர்ந்து ‘பகலில் ஓர் இரவு’ படத்தில் இவர் நடிகை ஶ்ரீதேவியுடன் நடித்திருந்தார்.
அந்தப் படத்தின் `இளமை எனும் பூங்காற்றே’ பாடல் ஒரு எவர்கிரீன் சாங் எனச் சொல்லலாம். தமிழில் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘மலபார் போலீஸ்;, ‘ரமணா’, ‘விசில்’ என இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், பிறகு சின்னத்திரை பக்கம் வந்தார்.
கே. பாலச்சந்தர் தயாரித்த டிவி தொடர்கள் மற்றும் ராடான் சீரியல்கள் என டிவியிலும் ஒரு ரவுண்டு வந்தார். ‘சித்தி’ , ‘வாணி ராணி’ ஆகியவை இவர் நடித்த சில டிவி தொடர்கள். ரவிக்குமாருக்கு மனைவி மற்றும் ஒரு மகன். மகன் தற்போது ஈவென்ட் மேனேஜ்மென்ட் பார்த்து வருகிறாராம். ரவிக்குமாரின் மகனுடைய நண்பர் தினேஷிடம் பேசினோம்.
ரவி சார் குடும்பம் சினிமா பின்னணி கொண்டதுதான். அவருடைய அப்பா கே.எம்.கே மேனன் மலையாள சினிமாவுல தயாரிப்பாளரா இருந்தார். அம்மா பாரதி மேனனும் நடிகைதான். அதனால தன்னுடைய 13வது வயசுலயே நடிக்க வந்துட்டார் ரவி சார். சீரியல்ல நடிக்கிறப்ப நெகடிவ் ரோல்ல நடிக்கவே முன்னுரிமை தருவார். அதுலதான் நடிக்க ரொம்ப ஸ்கோப் இருக்குன்னு சொல்வார். அதேபோல ஷூட்டிங் ஸ்பாட்ல நேரந்தவறாமையைக் கடைபிடிக்கறதுல அவ்வளவு கரெக்டார் இருப்பார்’ என்கிறார் இவர். ரவிக்குமாரின் மறைவுக்கு சினிமா சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.