காந்திநகர்,குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள அம்பிகாநகர் பகுதியை சேர்ந்த கரீஷ்மா பாகேல்(வயது 22) என்ற பெண், தனது 3 மாத ஆண் குழந்தையை காணவில்லை என கூறிய நிலையில், இது குறித்து அவரது கணவர் திலீப் போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது கரீஷ்மா குழந்தையை ஒரு அறையில் வைத்துவிட்டு குளிக்க சென்றதாகவும், திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை என்றும் போலீசாரிடம் கூறியிருந்தார். தொடர்ந்து கரீஷ்மாவின் வீடு முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அவர்களது வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தண்ணீர் தொட்டிக்குள் 3 மாத குழந்தை தானாக சென்று விழுந்திருக்க வாய்ப்பு இல்லை என்பதால், கரீஷ்மா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசியதை கரீஷ்மா ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கரீஷ்மாவை கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், “கர்ப்பமான சமயத்தில் இருந்தே கரீஷ்மாவுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தனது குழந்தை அதிகமாக அழுவதாக தனது குடும்ப உறுப்பினர்களிடம் கவலை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் குழந்தையை கொலை செய்துள்ளார்” என்று தெரிவித்தனர்.