மறைந்த முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இன்று தேசிய பள்ளிவாசலில் நடைபெறும் காலஞ்சென்ற பாக் லாவின் இறுதிச் சடங்கில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக, தற்போது 1MDB ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமரான நஜிப்பின் கோரிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ கோலின் லாரன்ஸ் செகுவேரா ஏற்றுக்கொண்டார்.
அதேநேரம் இன்று நடைபெறவிருந்த 1MDB ஊழல் வழக்கின் விசாரணையையும் செகுவேரா ரத்து செய்தார்.
அதனைத் தொடர்ந்து நஜிப், சிறைத்துறையின் பாதுகாப்பு அதிகாரிகளுளுடன் காலை 10.32 மணிக்கு நீதிமன்ற கட்டிடத்தை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.