பாடாங் கோத்தாபியில் தனியார் வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தியக் குடும்பத்திற்கு, மாநில ஆட்சி குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜ் முனைப்பில் பினாங்கு அரசின் வாடகை வீடு மாதம் 100 ரிங்கிட் வாடகையில் வழங்கப்பட்டது.அக்குடும்பம் முதலில் சமூக நலத் துறையின் தற்காலிக காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டது. ஏப்ரல் 3 அன்று அவர்களை நேரில் சந்தித்த டத்தோ ஸ்ரீ சுந்தரராஜ், வாடகை வீட்டு விண்ணப்பம் செய்ய அறிவுறுத்தினார். தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து, பரிசீலனைக்குப் பிறகு ஏப்ரல் 11 அன்று வீட்டின் சாவி வழங்கப்பட்டது.அக்குடும்பத்தின் குழந்தைகளின் கல்வியையும் கருத்தில் கொண்டு மாநில அரசு உதவி செய்துள்ளது. உண்மையான தேவையுள்ளவர்களுக்கே இந்த வசதி வழங்கப்படும் என்றும், விண்ணப்பங்கள் முறையான ஆவணங்களுடனும் தேர்வுகளுக்குப்பின் மட்டுமே ஏற்கப்படும் என்றும் அவர் கூறினார்.பினாங்கில் மாதம் வெறும் 100 ரிங்கிட் வாடகையில் வீடுகள் வழங்கப்படுவது மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பு என அவர் வலியுறுத்தினார். இது நிரந்தர சலுகை அல்ல; பாதுகாப்பான வாழ்க்கையைத் தொடங்கும் வாய்ப்பு என கருத வேண்டும் என்றும் கூறினார்.