காசா சிட்டி: ஹமாஸ் ஆயுதக்குழு கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் நடத்த, 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 251 பேர் பணயமாக காசாவுக்கு கடத்தப்பட்டனர்.
இதையடுத்து, ஹமாஸ் மீது இஸ்ரேல் போர் அறிவித்து, காசாவில் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. பல பணய கைதிகள் ஒப்பந்தம் மற்றும் ராணுவ நடவடிக்கையில் மீட்கப்பட்டனர். சிலர் கொல்லப்பட்ட நிலையில், அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தற்போது 59 பேர் ஹமாஸ் கட்டுப்பாட்டில் பணயமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 25 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் போரில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 51,000 ஆக உயர்ந்துள்ளது. போர் நிறுத்தம் மற்றும் பணய கைதிகள் விடுதலை குறித்து இஸ்ரேல்–ஹமாஸ் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.