Offline
Menu
இறையாண்மையை மீறும் செயல்: கத்தார் மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
By Administrator
Published on 09/12/2025 09:00
News

புதுடெல்லி,இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா மண்டலத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் 2 ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் உள்ள ஹமாஸ் தலைமையகத்தை குறிவைத்து நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த 5 உறுப்பினர்கள் பலியானார்கள். கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்றும் இது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும் கத்தாரில் ஹமாஸ் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல், அமெரிக்காவிற்கு முன்கூட்டியே தெரிவித்ததாகவும் அது குறித்து கத்தாரிடம் எச்சரித்ததாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால் அதை கத்தார் மறுத்துள்ளது. “தாக்குதல் நடந்த பிறகுதான் அமெரிக்கா எச்சரிக்கை தகவலை கொடுத்தது” என்று கத்தார் தெரிவித்துள்ளது.கத்தாரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த வகையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

கத்தார் அமிர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் பேசினேன். அப்போது தோஹாவில் நடந்த தாக்குதலுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தேன். கத்தாரின் இறையாண்மையை மீறுவதை இந்தியா கண்டிக்கிறது. பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாக இந்தியா உள்ளது. பயங்கரவாதம் மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிராக உள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments