Offline
Menu
நாடளவில் மீட்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் PRIME முறைமை அமல்படுத்தப்படும்
By Administrator
Published on 09/12/2025 09:00
News

பெட்டாலிங் ஜெயா:

சிலாங்கூரின் பத்தாங் காலி நிலச்சரிவு பேரழிவுக்கு பின் உருவாக்கப்பட்ட மொபைல் இன்டிக்ரேட்டெட் ரேடியோ அண்ட் இன்டர்நெட் கம்யூனிகேஷன் சிஸ்டம் (PRIME), இப்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகின்றது. தொடர்பாடல் அமைச்சர் பாஹ்மி பட்சில், கடந்த செப்டம்பர் 7 அன்று சபாவில் PRIME-ஐ அறிமுகப்படுத்தினார். இந்த திட்டம் அடுத்த மாதம் முதல் சரவாக்கிலும் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது.

2022 டிசம்பர் 16 அன்று சிலாங்கூரின் பத்தாங் காலியில் நிகழ்ந்த நிலச்சரிவு பேரழிவில் 31 பேர் உயிரிழந்தனர். காட்டுப் பகுதியிலும் மலைப்பகுதியிலும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட போதிலும், குறைந்த இணைய வசதி காரணமாக தொடர்பு பாதிக்கப்பட்டது. இதற்கு உடனடியாகத் தீர்வாக, அமைச்சர் பாஹ்மி பட்சில் வலியுறுத்திய பின் PRIME திட்டம் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது.

மலேசிய தொடர்பாடல் மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) முன்னெடுத்துள்ள PRIME திட்டமானது , பேரிடர் சூழ்நிலையில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான சிறந்த தொடர்பு இணைப்பை வழங்குகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (NADMA) மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு இது முக்கிய ஆதரவாக அமைகிறது. மேலும், போதிய தொடர்பு வசதி இல்லாத கிராமப்புறப் பகுதிகளிலும் இணைய அணுகலை மேம்படுத்துகிறது.

செயற்கைக் கோள் தொடர்பு, தாங்கிச் செல்லக்கூடிய செல்போன் நெட்வொர்க், இருவழி வானொலி, வைஃபை ஹாட்ஸ்பாட், ட்ரோன் ஆதரவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை PRIME ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் மீட்பு அமைப்புகள், அமலாக்கக் குழுக்கள், உள்ளூர் அதிகாரிகள் ஆகியோர் இடையே விரைவான ஒருங்கிணைப்பு சாத்தியமாகிறது. பேரிடர் தொடர்புகளை மேம்படுத்துவதோடு, கிராமப்புறங்களில் டிஜிட்டல் கல்வி, ஆன்லைன் தள பயன்பாடு மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் PRIME ஆதரவளிக்கிறது என MCMC தெரிவித்துள்ளது.

Comments