கோலாலம்பூர்,
உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் அந்நிய நாட்டினரை மலேசியாவிற்குள் நுழையச் செய்த குற்றச்சாட்டில், 18 அமலாக்க அதிகாரிகள் உட்பட மொத்தம் 27 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) கைது செய்துள்ளது.
சிலாங்கூர், மலாக்கா, கோலாலம்பூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில், 20 முதல் 50 வயதுக்குட்பட்ட 19 ஆண்கள் மற்றும் எட்டு பெண்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தேகநபர்கள் “கவுண்டர் செட்டிங்” என்றழைக்கப்படும் நடவடிக்கையில் ஈடுபட்டு, வெளிநாட்டினரை சட்டவிரோதமாக நுழையச் செய்வதற்காக லஞ்சம் பெற்றதாக நம்பப்படுகிறது.
இந்த சோதனையில், MACC 2 இலட்சம் ரிங்கிட் மதிப்பிலான ரொக்கப்பணம், நகைகள், தங்கக் கட்டிகள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், ஆடம்பர கைப்பைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட பல பொருட்களை பறிமுதல் செய்தது. மேலும், 34 தனிநபர்கள் மற்றும் ஆறு நிறுவனங்களுக்குச் சொந்தமான மொத்தம் 40 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு 10 இலட்சம் ரிங்கிட் அதிகமாகும் எனக் கூறப்படுகிறது.
MACC நேற்று காலை ஷா ஆலம், மலாக்கா, சிரம்பான் மற்றும் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் தடுப்புக் காவல் மனுக்கள் தாக்கல் செய்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில், அனைத்து சந்தேகநபர்களும் செப்டம்பர் 12 முதல் 16 வரை, மூன்று முதல் ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுகிறார்கள். கைது செய்யப்பட்டவர்களில் 18 அமலாக்க அதிகாரிகள் தவிர, ஐந்து நிறுவன உரிமையாளர்கள், ஒரு நிறுவன மேலாளர் மற்றும் மூன்று பொதுமக்கள் அடங்குவர்.