காத்மாண்டு,இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் ஆட்சியாளர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அந்நாட்டின் குடிமக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஊழல் ஒழிப்பு பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர். மந்திரிகள் மற்றும் ஆளும் வர்க்கத்தினரின் வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கேள்வி எழுப்பி வந்தனர்.
இது நேபாள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வந்த நிலையில், பதிவு செய்யாத சமூக வலைத்தளங்களை நேபாள அரசு கடந்த 4-ந்தேதி நள்ளிரவு முதல் தடை செய்தது. இது இளம் தலைமுறையினர் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள், இளைஞர்களை கொண்ட இளம் தலைமுறையினர் தலைநகர் காத்மாண்டுவில் கடந்த 8-ந்தேதி ஆயிரக்கணக்கில் கூடி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.