திரானே,இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மென்பொருள், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலையை நோக்கி உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஏஐ தொழில்நுட்பம் தற்போது விஞ்ஞானத்தை கடந்து அரசியலிலும் கால் பதித்துள்ளது என்றால் நம்புவதற்கு சற்று கடினம்தான். ஆனால், அதை சாத்தியப்படுத்தி ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது அல்பேனியா.
சமீபத்தில் அந்நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 4-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளார் சோசஸிஸ்ட் கட்சியை சேர்ந்த எடி ராமா. புதிய ஆட்சியில் நாட்டில் ஊழலை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஏஐ மந்திரியை அவர் நியமித்துள்ளார். இந்த ஏஐ மந்திரிக்கு ‘டியெல்லா’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘டியெல்லா’ என்பது அல்பேனிய மொழியில் சூரியனை குறிக்கும். ஏஐ மந்திரி நாட்டின் பொது டெண்டர் நடைமுறைகளை மேற்பார்வையிட்டு ஊழலை தடுக்கும் பணியில் ஈடுபடும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
டெண்டர் முதல் பல்வேறு பணிகளை ஏஐ மந்திரி பார்க்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் நாட்டில் லஞ்சம், ஊழல், முறைகேடுகளை முழுமையாக ஒழிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், பாரம்பரிய உடை அணிந்து டிஜிட்டல் அவதாரமாக ‘டியெல்லா’ உருவாக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஏற்கெனவே ‘இ-அல்பேனியா’ தளத்தில் பொதுமக்களுக்கு ஆவணங்கள் தொடர்பான உதவிகளை செய்யும் ஆன்லைன் உதவியாளராக ‘டியெல்லா’ செயல்பட்டு வந்தது குறிப்பிடத்கதக்கது.
இதனிடையே இந்த ஏஐ அமைச்சர் நியமனத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை என இந்த ஏஐ நியமனத்தை ஒருசாரார் பாராட்டினாலும், ஒரு தரப்பினர் ஏஐ அமைச்சரை ஏமாற்ற முடியும் எனவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.