கோலாலம்பூர்,
சட்டத்திற்கான இணக்க நடவடிக்கை (Op PUU) எனப்படும் சிறப்பு நடவடிக்கையின் விழிப்புணர்வு நடவடிக்கையில், செப்டம்பர் 6 முதல் இதுவரை 11,984 எச்சரிக்கை நோட்டீஸ்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையில் சிறிய போக்குவரத்து விதிமீறல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
“சிறிய விதிமுறைகல் ஆனாலும் அதை அலட்சியப்படுத்தாது கடைப்பிடிப்பது சமூக ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டைக் காட்டுகிறது. மேலும், அவை அனைவரின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டவை,” என அவர் தெரிவித்தார். விதிமீறல்கள் நடந்த இடத்தில் உடனடி அபராத நோட்டீஸ்கள் வழங்கப்படும் பின்னர் அது குறித்து அறிவிப்போம் என்று ஃபடில் மார்சுஸ் கூறினார்.
இந்நடவடிக்கையில் பாதசாரிகள் மேம்பாலம் அல்லது குறுக்கு நடைபாதை பயன்படுத்தாமல் சாலையை கடத்தல், சிக்னல் மீறல், போக்குவரத்து தடைகள் ஏற்படுத்தல், வாகனங்களை வெள்ளை கோட்டை மீறி நிறுத்துதல், மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமை, மாற்றியமைக்கப்பட்ட மஃப்லர் பயன்படுத்துதல் போன்ற குற்றங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
தற்போது டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகப் பகுதிகளில் மட்டும் செயல்படுகின்ற இந்த நடவடிக்கை, பின்னர் கோலாலம்பூரின் பிற பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும். சாலை விதிகளை மீறுவோருக்கு எந்தவித சமரசமும் செய்யப்படாது என்றும், சீரான போக்குவரத்து மற்றும் அனைவரின் பாதுகாப்பிற்காக பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்நடவடிக்கையில் கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைக்கு, JPJ, DBKL மற்றும் சுற்றுச்சூழல் துறையின் உதவியும் வழங்கப்பட்டது. நேற்று இரவு புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற நடவடிக்கையில் ஃபாதில் நேரடியாக பங்கேற்று, விதிமீறிய சில வாகன ஓட்டிகளுக்கு அறிவுரையும் வழங்கினார் ஃபடில் மார்சுஸ்.