காத்மண்டு,நேபாளத்தில் ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அரசுக்கு எதிராக கடந்த 8ம் தேதி முதல் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின்போது நேபாள சிறைகளில் இருந்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றனர்.
இதனிடையே, நேபாளத்தில் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. தற்போது பிரதமர் சுசீலா கார்கி தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ள நிலையில் சட்டம்-ஒழுங்கை சுமூக நிலைக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வன்முறையின்போது நாட்டின் பல்வேறு சிறைகளில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளை மீண்டும் கைது செய்ய போலீசார், ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிறைகளில் இருந்து தப்பிச்சென்ற 3 ஆயிரத்து 723 கைதிகளை போலீசார் மீண்டும் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆனாலும், இன்னும் 10 ஆயிரத்து 320 கைதிகள் தலைமறைவாக உள்ளதால் அவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறைகளில் இருந்து தப்பிச்சென்ற கைதிகளில் சிலர் இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என்பதால் இந்திய போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் எஞ்சிய கைதிகளை கைது செய்யவும் நேபாள போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.