அலோர் ஸ்டார்:
தேசியப் பள்ளிகளில் மாண்டரின் மற்றும் தமிழ் மொழிகள் விருப்பப் பாடங்களாக வழங்கப்பட வேண்டுமே தவிர, அவற்றை கட்டாயப் பாடங்களாக ஆக்கக் கூடாது என்று பாஸ் துணைத் தலைவர் டத்தோ’ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்தார்.
நாட்டில் மலாய் மொழியை தேசிய மொழியாக வலுப்படுத்துவதுவதே எனது முதன்மை நோக்கமாக இருக்கவேண்டும். இதன் மூலம் இனத்தைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு குடிமகனும் மலாய்மொழித் திறன் வழியாக நாட்டின் அடையாளத்தில் முழுமையாக இணைந்திருப்பர் என்று தெரிவித்தார்.
“தேசியப் பள்ளிகளில் சீன மற்றும் இந்திய மொழிகளை விருப்பப் பாடமாக வழங்கினால், ஆர்வமுள்ள மாணவர்கள் அவற்றைக் கற்கலாம். கட்டாயப்படுத்தாமல் தேர்வு செய்யும் வாய்ப்பை உருவாக்குவதே இதன் நோக்கம்,” என்று அவர் கட்சி ஆதரவாளர்கள் மாநாட்டின் தொடக்கத்தில் உரையாற்றினார்.
மேலும் துவான் இப்ராஹிம் கூறுகையில், மொழி மற்றும் கலாச்சாரப் பரிச்சயம் மூலம் சமூகங்களுக்கிடையேயான சந்தேகமும் தவறான புரிதலும் குறையும், மேலும் இனங்களுக்கிடையே ஒற்றுமை வலுப்படும் என்றார் .
இதேவேளை, கெப்போங் (DAP) நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் விமர்சனத்துடன் பதிலளித்தார்.
“தேசியப் பள்ளிகளில் மாண்டரின் மற்றும் தமிழ் அறிமுகப்படுத்துவதில் பாஸ் உண்மையிலேயே தீவிரமாக இருந்தால், முதலில் தங்கள் சொந்த பாஸ்டி (PASTI) பாலர் பள்ளிகளில் இதை செயல்படுத்த வேண்டும். மேடையில் பேசுவது எளிது, ஆனால் சொன்னதை நடைமுறைப்படுத்துவதுதான் முக்கியம்,” என்று அவர் கூறினார்.
லிம் மேலும் சுட்டிக்காட்டுகையில், தேசியப் பள்ளிகளில் மாண்டரின் மற்றும் தமிழ் மொழிகள் நீண்ட காலமாக கூடுதல் பாடங்களாகவே கற்பிக்கப்படுகின்றன. எனவே, துவான் இப்ராஹிமின் பரிந்துரை அவர் கல்வி முறையை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை அல்லது இல்லாத பிரச்சினைகளை அரசியல் காரணங்களுக்காக எழுப்புகிறார் என்பதற்கான சான்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நாட்டிற்கு இப்போது தேவைப்படுவது இனங்களை துண்டு துண்டாக பிரிக்கும் யோசனைகள் அல்ல, மாறாக தேசிய ஒற்றுமையை விரிவாகக் கையாளும் ஒருங்கிணைந்த கல்வி அமைப்பாகும்,” என்று லிம் வலியுறுத்தினார்.