தோஹா,
கத்தாரின் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலை “சட்டவிரோதம், கொடூரம் மற்றும் பாதுகாக்க முடியாத செயல்” என்று கடுமையாகக் கண்டித்தார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இது கத்தாரின் ஆட்சிக்கு எதிரான தாக்குதல் மட்டுமல்லாமல், அமைதிக்கான முயற்சிகளை திட்டமிட்டு சிதைக்கும் நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.
அராப்–இஸ்லாமிய சிறப்பு உச்சிமாநாட்டில் உரையாற்றிய அன்வார், “காசா மக்கள் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அழிவைச் சந்தித்து வருகின்றனர். குடும்பங்கள் அழிக்கப்பட்டு, மருத்துவமனைகள் இடிந்துள்ளன. சிறு குழந்தைகள் கூட இடிபாடுகளில் புதையுண்டுள்ளனர்,” இரு வருந்தத்தக்கது எனக் குறிப்பிட்டார்.
மேலும, இஸ்ரேலுக்கு எதிராக கண்டனங்கள் மட்டும் போதாது; கடுமையான தண்டனை நடவடிக்கைகள் அவசியம் என அவர் வலியுறுத்தினார். அந்த நாட்டுடன் தூதரக உறவுகளும் வர்த்தக உறவுகளும் நிறுத்தப்பட வேண்டும் என்றும், இதில், அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்புள்ள நாடுகள் அதிகப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
காசா மக்களுக்கு உதவிப் பொருட்கள் கொண்டுசெல்லும் படகு பாதுகாப்பாக கரை அடைய உலக நாடுகள் ஒன்றிணைந்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அன்வார் வேண்டுகோள் விடுத்தார்.