Offline
Menu
தாய்லாந்து–கம்போடிய எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரிப்பு: கம்போடியாவின் கடும் ஆட்சேபணை
By Administrator
Published on 09/22/2025 09:00
News

நோம்பென்: தாய்லாந்து–கம்போடிய எல்லைப் பகுதிகளில் பதற்ற நிலை தொடர்ந்து நீடிக்கிறது.

தாய்லாந்தின் சா கேய்யோ (Sa Kaeo) வட்டாரத்தில் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி (புதன்கிழமை) வன்முறைச் சம்பவங்கள் வெடித்தன. அதன் மறுநாள் (செப்டம்பர் 18) அப்பகுதியில் வசிக்கும் கம்போடியர்களுக்கு எதிராக தாய்லாந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாய்லாந்து ராணுவம் அறிவித்தது.

இதை கடுமையாக கண்டித்த கம்போடியா, அதிகாரபூர்வ ஆட்சேபணை ஒன்றை பதிவு செய்துள்ளது. தாய்லாந்தின் இந்த நடவடிக்கை எல்லைப் பகுதிகளில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்துவதாக கம்போடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கம்போடிய வெளியுறவுத்துறை மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு அமைச்சகம், “வரையறுக்கப்படாத எல்லைப் பகுதிகளில் தாய்லாந்து ராணுவம் தன் உள்நாட்டு சட்டங்களை விதிப்பது அனைத்துலகச் சட்டங்களுக்கு முரண்பட்டது” என்று செப்டம்பர் 20ஆம் தேதி (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், தாய்லாந்து ராணுவம் அந்நாட்டின் இறையாண்மைக்கு எதிரான குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தது.

பிரே ச்சான் பகுதியில் நடந்த சம்பவத்தில், ரப்பர் தோட்டாக்களும் கண்ணீர் புகையும் பயன்படுத்தப்பட்டதாக கம்போடிய அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. “வலுக்கட்டாயமாக எல்லைப் பகுதிகளில் இறையாண்மை சுமத்தும் முயற்சி இது” என கம்போடிய வெளியுறவு அமைச்சகம் கருத்துரைத்தது.

அறிக்கையில் மேலும், “வரையறுக்கப்படாத சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் தாய்லாந்தின் ஆதிக்கம், ஐக்கிய நாடுகள்  அடிப்படைக் கொள்கைகளுக்கு புறம்பானது. மற்றொரு நாட்டின் பகுதி மீது அழுத்தம் கொடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comments