Offline
Menu
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நாளை தொடக்கம்
By Administrator
Published on 09/22/2025 09:00
News

கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது, மைசூரு தசரா விழா. கர்நாடகத்தின் ‘நாடஹப்பா’ என அழைக்கப்படும் தசரா விழா கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் மன்னர் காலத்தில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூருவில் கொண்டாடப்படும் தசரா விழா உலக புகழ்பெற்று விளங்குகிறது.

வரலாற்று சிறப்புமிக்க தசரா விழா கடந்த 414 ஆண்டுகளாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 415-வது ஆண்டாக இந்த ஆண்டு தசரா விழா செப்டம்பர் மாதம் 22-ந்தேதி (நாளை) தொடங்கி அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரை 11 நாட்கள் கோலாகலமாக நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி நாளை (திங்கட்கிழமை) உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஏற்கனவே அரசு சார்பில் அமைக்கப்பட்ட தசரா கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.

எழுத்தாளர் பானு முஷ்தாக்

இந்த ஆண்டு தசரா விழாவை ஆடம்பரமாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி மைசூரு நகரம் மற்றும் அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இளைஞர் தசரா, உணவு மேளா, தசரா கண்காட்சி, மலர் கண்காட்சி, திரைப்பட விழா, குழந்தைகள் தசரா உள்ளிட்டவை தொடங்க உள்ளது. இதில் இளைஞர் விழா ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.

நாளை காலையில் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. அதனையடுத்து அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வெள்ளி தேரில் எழுந்தருளுகிறார்.

இதையடுத்து காலை 10.10 மணி முதல் காலை 10.46 மணிக்குள் சுப ரிஷிகா லக்கனத்தில் ‘புக்கர்’ விருது பெற்ற கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக் சாமுண்டீஸ்வரி அம்மன் மீது மலர்களை தூவி தசரா விழாவை தொடங்கி வைக்கிறார். அதனைதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மைசூரு தசரா விழாவை பொதுவான நபர், பிரபலங்கள் தொடங்கி வைப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடும் எதிர்ப்புக்கு மத்தியில் எழுத்தாளர் பானு முஷ்தாக் தசரா விழாவை தொடங்கி வைக்க உள்ளார்.

தொடக்க விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மன்னரும், மைசூரு-குடகு தொகுதி எம்.பி.யுமான யதுவீர் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூக்களை தூவி வணங்குகிறார்கள். அந்த சந்தர்ப்பத்தில் மாநிலத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி முதல்-மந்திரி சித்தராமையா, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்.

தசரா விழா தொடங்கியதும், தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் வரிசையாக தொடங்கி நடைபெறும். இந்த தசரா விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்-மந்திரி சித்தராமையா இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மைசூருவுக்கு வர உள்ளார்.

Comments