லாபுவான்,
மலேசியாவில், மரணத்தை ஏற்படுத்தும் பயங்கரமான நோய்களில் முதன்மையானதாக இதய நோய் இன்னும் தொடர்கிறது என்று சுகாதார துணை தலைமை இயக்குநர்டாக்டர் இஸ்முனி போஹாரி தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டின் புள்ளிவிபரத் துறையின் தகவலின்படி, ischaemic heart diseas மருத்துவ ரீதியாக சான்றளிக்கப்பட்ட மரணங்களில் 15.1% பங்காகி இரண்டாவது முக்கிய காரணியாக இருந்தது. குறிப்பாக 41–59 வயதினருக்கு இதய நோய் அதிகம் தாக்கி வருகிறது. இதில் ஆண்கள் பெண்களை விட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“இது சுகாதாரத்தை மட்டுமல்லாது, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் கவலைக்குரிய போக்காகும்,” என அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப். 21) நடைபெற்ற உலக இதய தின நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு, நீண்டகால மன அழுத்தம் ஆகியவை இதய நோய்க்கான முக்கிய காரணிகள். இதற்கு கூடுதலாக புகைபிடித்தல், அதிக உடல் எடை, உடற்பயிற்சி இல்லாமை, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் ஆகியவை அபாயத்தை அதிகரிக்கின்றன என அவர் மேலும் கூறினார்.
2023ஆம் ஆண்டின் தேசிய சுகாதார மற்றும் நோய்விளைவியல் கணக்கெடுப்பில், மலேசியாவில் பெரியவர்களில் சர்க்கரை நோய் (15.6%), உயர் இரத்த அழுத்தம் (29.2%), அதிக கொலஸ்ட்ரால் (33.3%), அதிக உடல் எடை (21.8%) மற்றும் புகைபிடித்தல் (19%) இருப்பதாக பதிவாகியுள்ளது.
லாபுவானில் மட்டும் ஆகஸ்ட் 2025 நிலவரப்படி 93 புதிய இதய நோய் வழக்குகள் பதிவாகி, மொத்தம் 1,388 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
“இது எங்களுக்கு ஒரு எச்சரிக்கை. தாமதிக்காமல் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அவர் எச்சரித்தார்.
அவர் பொதுமக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள, சீரான சுகாதார பரிசோதனை மேற்கொள்ளவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் வலியுறுத்தினார். ஆகஸ்ட் வரை லபுவானில் மட்டும் 3,877 பேர் சுகாதார பரிசோதனை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் உலக இதய தினத்தின் தலைப்பு “Don’t Miss a Beat” எனும் நிலையில், மலேசியர்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.