கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் நோய்ப் பரவலைக் கண்காணிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட MySejahtera செயலி, தற்போது மலேசியாவின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் சுகாதாரத் தளமாக உருவெடுத்துள்ளது. மருத்துவப் பதிவுகள், மருந்துப் பரிந்துரைகள், ஆய்வகப் பரிசோதனை முடிவுகள், மருத்துவச் சந்திப்புகள், உடல் உறுப்பு தானப் பதிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஒரே செயலியின் மூலம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடிகிறது.
சுகாதார அமைச்சின் டிஜிட்டல் சுகாதாரப் பிரிவு இயக்குநர் டாக்டர் மகேஸ்வர ராவ் அப்பண்ணன், மலாய் மெயில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் இதனைத் தெரிவித்தார். “ஒரு நபர், ஒரு மருத்துவப் பதிவு” (One Person, One Record) என்ற இலக்கை அடையும் நோக்கில் MySejahtera செயலி மேம்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். கோவிட்-19 காலத்தில் சுமார் 32 மில்லியன் பேர் இச்செயலியில் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது மாதந்தோறும் 12 முதல் 15 மில்லியன் பேர் இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
மருந்துகளின் பெயர் தெரியவில்லையா?
முன்னதாக, அரசு மருத்துவமனைகளிலிருந்து தனியார் மருத்துவமனைகளுக்குச் சிகிச்சைக்காகச் செல்லும் நோயாளிகள், தங்களது மருத்துவ வரலாறு மற்றும் உட்கொள்ளும் மருந்துகளின் பெயர்களை நினைவில் வைத்திருப்பதில் சிரமங்களை எதிர்நோக்கினர். குறிப்பாக, மருந்துகளின் பெயர்களைத் தெரிவிக்க முடியாமல், ‘வெள்ளை நிறத்தில் வ
ஆனால், தற்போது 15 மில்லியனுக்கும் அதிகமானோரின் மருந்துப் பரிந்துரைகள் மற்றும் மருத்துவப் பதிவுகள் MySejahtera செயலியில் கிடைக்கின்றன. ஆய்வகப் பரிசோதனை முடிவுகள், பல் மருத்துவப் பதிவுகள் மற்றும் கதிரியக்கப் பரிசோதனை அறிக்கைகள் உள்ளிட்டவற்றையும் ஒரே கிளிக்கில் பார்வையிட முடியும். தேவையானபோது இந்தத் தகவல்களைத் தனியார் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுடனும் பகிர்ந்துகொள்ளலாம்.
அரசு – தனியார் மருத்துவமனைகள் இணைப்பு
மலேசிய டிஜிட்டல் சுகாதாரச் சான்றளிப்பு வலையமைப்பின் கீழ் தற்போது 50க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளும் 3,000க்கும் மேற்பட்ட தனியார் கிளினிக்குகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவத் துறைகளுக்கு இடையே மருத்துவத் தகவல்களைப் பாதுகாப்பாகப் பகிர்ந்துகொள்ள முடியும்.
தற்போது MySejahtera செயலியின் மூலம் அரசு சுகாதார கிளினிக்குகள் மற்றும் பல் மருத்துவ நிலையங்களில் மருத்துவச் சந்திப்புகளுக்கான முன்பதிவுகளை மேற்கொள்ளலாம். இருப்பினும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் சந்திப்புகளை முன்பதிவு செய்யும் வசதி இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. எதிர்காலத்தில் அந்த வசதியையும் இணைக்கச் சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.