கூலிம் – ஜாலான் கூலிம் ஹை-டெக் பார்க் (KHTP) 1-ல் உள்ள தொழிற்சாலைக்கு அருகிலுள்ள போக்குவரத்து சிக்னல் சந்திப்பில் , நேற்று இரவு, ஒரு பெண் ஓட்டிச் சென்ற புரோட்டான் சாகா FL கார் டெஸ்லா காருடன் மோதியதில் அவர் உயிரிழந்தார். இரவு சுமார் 11.45 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 39 வயதான அந்தப் பெண், தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
கூலிம் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் ஷம்சுல் சின்ரிங் கூறுகையில், 29 வயதான நபர் ஓட்டிச் சென்ற டெஸ்லா கார், போக்குவரத்து சிக்னலில் நிற்கத் தவறியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.
அவர் கூற்றுப்படி, லெபு பெர்டானா திசையிலிருந்து நாகா லிலிட் நோக்கி வந்த டெஸ்லா கார், பட்டர்வர்த்- கூலிம் நெடுஞ்சாலை (BKE) திசையிலிருந்து லெபு பெர்டானா நோக்கி வந்து கொண்டிருந்த புரோட்டான் சாகா FL காரின் வலது பக்கத்தில் மோதியதாக நம்பப்படுகிறது. டெஸ்லா ஓட்டுநரின் வலது கையில் காயம் ஏற்பட்டதுடன், அவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்விவகாரம் குறித்து காவல்துறை இன்னும் விசாரணை நடத்தி வருகிறது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.