Offline
Menu
கோல நெருஸில் திடீர் வெள்ளம்
By Administrator
Published on 11/25/2026 14:00
News
உடமைகளைக் கூட மீட்க முடியாமல் தவித்த மக்கள்!

நேற்று (நவம்பர் 23) மாலை முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து, கோல நெருஸ், தோக் ஜெம்பால் பகுதியில் உள்ள தாமான் உடா முர்னி குடியிருப்புப் பகுதியில் வெள்ள நீர் திடீரென உயர்ந்ததால், மக்கள் தங்களது உடமைகளைக் கூடப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடியாமல் அவசர அவசரமாக வெளியேறினர்.

 

நேற்று மாலை பெய்த கனமழையால் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் மிக வேகமாகப் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தங்களது விலைமதிப்ப்புள்ள பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு, தோக் ஜெம்பால் பல்நோக்கு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு இடம்பெயர்ந்தனர்.

 

37 வயதான ரோகியா சாலே கூறுகையில், வீட்டிற்குள் முழங்கால் அளவிற்கு நீர் இவ்வளவு வேகமாக உயரும் எனத் தான் எதிர்பார்க்கவில்லை என்றார். ‘கோல்டன்ஹார் சிண்ட்ரோம்’ பாதிப்புக்குள்ளான தனது 5 வயதுக் குழந்தை ஹெல்மி அல் ஃபாகி உட்பட நான்கு பிள்ளைகளின் பாதுகாப்பே தனக்கு முதன்மையானதாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

1975-ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் வசித்து வரும் 72 வயதான சபேதா உமர் கூறுகையில், கடந்த ஆண்டு இருமுறை வெள்ளம் ஏற்பட்ட போதிலும், இம்முறை மாலை 5 மணியளவிலேயே வீட்டிற்குள் நீர் மிக வேகமாகப் புகுந்துவிட்டதாகவும், இப்பகுதியின் வடிகால்கள் தாழ்வாக இருப்பதால் அதிகப்படியான மழைநீரைத் தாங்க முடிவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

 

நிவாரண முகாம் நிலவரம்: சமூக நலத்துறையின் InfoBencana தரவுகளின்படி, இன்று (நவம்பர் 24) காலை 9 மணி நிலவரப்படி, 40 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர் டோக் ஜெம்பால் பல்நோக்கு மண்டப நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளை அதிகாரிகள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

Comments