Offline
Menu
பள்ளிக்கு சென்ற மாணவி கருப்பு வேனில் கடத்தல்… சினிமாவை மிஞ்சும் காட்சிகள்
Published on 01/14/2025 04:39
News

கொழும்பு,இலங்கையின் கண்டி மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர், தனது சக தோழியுடன் நேற்று காலை பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் வந்த கருப்பு மினி வேன் ஒன்று, சாலையின் ஓரம் நின்றது. மாணவிகள் வேனின் அருகே வந்தபோது திடீரென வேனில் இருந்து வெளியே வந்த மர்ம நபர் ஒருவர், மாணவிகள் இருவரில் ஒருவரை வலுக்கட்டாயமாக பிடித்து வேனுக்குள் தள்ளினார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த மாணவி, சுதாரிப்பதற்குள் அந்த மர்ம நபர் மாணவியை வேனுக்குள் தள்ளிவிவிட்டார். மாணவியுடன் வந்த சக மாணவி, இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓடிவிட்டார்.

இந்த காட்சிகளை சுமார் 50 மீட்டர் தூரம் தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், வேகமாக ஓடி வந்து மாணவியை அந்த மர்ம நபரிடம் இருந்து காப்பாற்ற முயன்றார். வேனுக்குள் இருந்து மாணவியை மீட்பதற்குள் அந்த வேன், காப்பாற்ற வந்த இளைஞரை இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டது. தொடர்ந்து வேனில் தொங்கியவாறே அந்த இளைஞர் மாணவியை காப்பாற்ற முற்பட்ட நிலையில், சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்று கீழே விழுந்துவிட்டார்.

இந்த தகவலை அறிந்த மாணவியின் பெற்றோர், அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்தலில் ஈடுபட்ட நபர், மாணவியின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்த நபருக்கும், மாணவிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்ததாகவும், பின்னர் சிறுமியின் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

திருமணத்துக்கு மாணவியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால் இந்த கடத்தல் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை போலீஸார் கண்டுபிடித்த நிலையில், மாணவியையும், கடத்தலில் ஈடுபட்ட நபரையும் விரைந்து கண்டுபிடிப்பதற்காக மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, பள்ளி மாணவியை ஆட்கள் நடமாட்டமுள்ள சாலையில் வேனில் கடத்திச் செல்லப்படும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments