Offline
மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் சந்தானத்திற்கு சுந்தர்.சி வேண்டுகோள்!
Published on 01/14/2025 04:45
News

சென்னை,விஷால் மற்றும் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மதகஜராஜா’. இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்த இப்படத்தில் மயில்சாமி, மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பின் வெளியானாலும் திரைப்படம் எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருக்கிறது. இப்படத்தில் சந்தானத்தின் காமெடிக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், இயக்குனர் சுந்தர்.சி நடிகர் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இப்படம் குறித்து செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசிய சுந்தர்.சி, “13 ஆண்டுகளாக இந்த நாளுக்காக தான் காத்திருந்தோம். அனைவரும் இப்படத்தை சிரித்து ரசித்து பார்க்கும் போது, இதை விட சிறந்த பொங்கல் பரிசு எதுவுமே இருக்காது. குறைந்தது 15 நிமிடமாவது உங்களை இப்படம் மனம் விட்டு சிரிக்க வைக்கும் என நம்புகிறேன்.

சந்தானத்தை நான் எவ்வளவு மிஸ் பண்றேன் என்பதை ‘மதகஜராஜா’ படம் பார்த்தால் தெரியும். அவர் பெரிய நாயகனாகிவிட்டார். அவருக்கு ஒரு வேண்டுகோள். அவர் மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும். அவரை ரொம்பவே மிஸ் பண்றோம். மிஸ் யூ சந்தானம்” என்று தெரிவித்துள்ளார்.

Comments