Offline
Menu
மெக்சிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்ற Google Maps திட்டம்
Published on 01/29/2025 00:57
News

வாஷிங்டன்:

அமெரிக்க புவியியல் பெயர்கள் அமைப்பில் அதிகாரபூர்வமாகப் புதுப்பிக்கப்பட்டவுடன், Google Maps அமைப்பு, மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என மாற்றும் என்று, ஜனவரி 27ஆம் தேதி ஒரு எக்ஸ் பதிவில் Google நிறுவனம் தெரிவித்தது.

இந்த மாற்றம் அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தப்படும். ஆனால் மெக்சிகோவில் மெக்சிகோ வளைகுடா என்றே பெயர் இருக்கும். இரு நாடுகளுக்கும் வெளியே, Google பயனர்கள் இரு பெயர்களையும் Google Maps இல் பார்ப்பார்கள் என்றும் அது தெரிவித்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் உள்துறை அமைச்சு, ஜனவரி 24ஆம் தேதி அன்று மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று அதிகாரபூர்வமாக மாற்றியதாகக் கூறியது. அதேபோல், வட அமெரிக்காவின் மிக உயரமான அலாஸ்கன் சிகரமான தெனாலி, மெக்கின்லி மலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆல்பாபெட்டின் கூகுலுக்குச் சொந்தமான கூகுல் மேப்ஸ், மெக்கின்லி சிகரத்துக்கும் இதேபோன்ற மாற்றத்தைச் செய்யும்.

ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்ற சில மணி நேரங்களுக்குப் பிறகு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நிர்வாக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பெயர் மாற்றங்களை அதிபர் டேனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.

ஜனவரி மாதத் தொடக்கத்தில் மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், அமெரிக்கா உட்பட வட அமெரிக்காவை மெக்சிகன் அமெரிக்கா என்று மறுபெயரிட வேண்டும் என்று நகைச்சுவையாகப் பரிந்துரைத்தார். இந்தப் பெயர் இப்பகுதியின் ஆரம்பகால வரைபடத்தில் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments