இந்தூர்,மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் ஜவஹர் மார்க் பகுதியில் தவுலத் கஞ்ச் என்ற இடத்தில் 3 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. அதில், அடித்தளம் உள்பட கட்டிடம் முழுவதும் விழுந்ததில், ஒரு குழந்தை உள்பட 14 பேர் சிக்கி கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார், மாவட்ட நிர்வாகம், மாநில பேரிடர் அவசரகால பொறுப்பு படை, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் உள்ளூர்வாசிகள் உதவியுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், ஜே.சி.பி.க்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவை உதவியுடன் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சி நடந்தது. இதில், 14 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
எனினும், பஹீம் மற்றும் அலீபா (வயது 20) ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்த 12 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து, காவல் ஆணையாளர் சந்தோஷ் குமார், மாவட்ட கலெக்டர் சிவம் வர்மா மற்றும் நகராட்சி ஆணையாளர் ஹர்ஷிகா சிங் ஆகியோர் மீட்பு முயற்சிகளை பார்வையிடுவதற்காக இரவு முழுவதும் தொடர்ந்து இருந்தனர்.