கோம்பாக்:
காரக் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் பல்வேறு வாகனங்கள் மோதிய விபத்தில், 19 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு ஆண்கள் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து அதிகாலை 2 மணியளவில் தகவல் கிடைத்ததையடுத்து, செலாயாங் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஆறு அதிகாரிகள் மற்றும் ஒரு மீட்பு வாகனம் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர் என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு உதவி இயக்குநர் அமாட் முகிலிஸ் மொக்தார் தெரிவித்தார்,
“பெரோடுவா அக்டிவா, பெரோடுவா மைவி மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய மூன்று கார்கள் மோதியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 20 வயதுடைய நான்கு ஆண்கள் காயமடைந்த நிலையில் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.
“ஆனால் ஹோண்டா சிட்டி காரில் சிக்கியிருந்த 19 வயது பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சுகாதார அமைச்சக மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார்,” என்று அவர் கூறினார்.