பாலிங்:
மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஒருவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் விசாரணைக்கு உதவும் வகையில் இரண்டு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாலிங் மாவட்ட காவல்துறைத் தலைவர் துணை கண்காணிப்பாளர் அமாட் சலிமி முகமட் அலி தெரிவித்தார்.
24 மற்றும் 27 வயதுடைய இரண்டு போலீசாரும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 385 (மிரட்டி பணம் பறித்தல்) கீழ் விசாரிக்கப்படுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு 74 வயது பெண் ஒருவர் புகார் அளித்தார். அவர், தனது 32 வயது மகன் முந்தைய நாள் மாலை 7 மணியளவில் வீடு திரும்பி, போலீசார் தன்னை தடுத்து வைத்து, மொபைல் போனை பறிமுதல் செய்து, அதைத் திருப்பித் தர RM200 கேட்டதாகத் தெரிவித்தார்.
ஆனால் தாயும் மகனும் பணத்தை வழங்கத் தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில், அந்த நபர் திடீரென சரிந்து சுயநினைவை இழந்தார். சுகாதார அமைச்சக மருத்துவ குழு விரைவில் வந்து, அவர் உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தது.
பின்னர், பாலிங் காவல் நிலைய அதிகாரிகள் இரவு 11.30 மணிக்கு அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியபோது, உடலில் காயங்கள் அல்லது குற்றச்சாட்டு எதுவும் இல்லை என கண்டறிந்தனர்.
மரணத்திற்கான காரணம் உறுதி செய்ய, சடலம் அலோர் ஸ்டாரிலுள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் (HSB) பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பரிசோதனையில், அவர் ‘கடுமையான மாரடைப்பு’ காரணமாக (SDR) இறந்தார் என உறுதி செய்யப்பட்டது.
ஆனால், மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டு தொடர்பாக இரண்டு போலீசாரும் கைது செய்யப்பட்டு, இரண்டு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்றும், போதைப்பொருள் சோதனைகளிலும் எதிர்மறை முடிவு வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
“விசாரணை எளிதாக நடைபெற இருவரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக கட்டொழுங்கு விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய போலீசார் முழுமையான விசாரணை மேற்கொள்கின்றனர்,” என்று அமாட் சலிமி கூறினார்.
அத்துடன், பொதுமக்கள் தொடர்புடைய தகவல்களை MERS 999 ஹாட்லைன் மூலம் வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.