கோலாலம்பூர்:
உலகிலேயே இவ்வாண்டின் மிகச் சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியான ரகாசா, ஹாங்காங் நகரைப் புயல் காற்றுடனும் கடும் மழையுடனும் செப்டம்பர் 24 (புதன்கிழமை) தாக்கியுள்ளது. நகரமே செயலற்ற நிலையில், 700க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்தாகியுள்ளன.ஆசியாவின் நிதி மையமான ஹாங்காங்கின் கிழக்கு, தெற்குக் கரையோரங்களில் பேரலைகள் கரைபுரள்வதால் அதிகாரிகள், மக்களை வெளியில் வரவேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
மணிக்கு சுமார் 200 கி.மீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்று, புதன்கிழமை அதிகாலை நகரின் தெற்கு வட்டாரத்தை 100 கி.மீட்டர் அளவில் சுற்றிவளைக்கும் என்று கூறப்பட்டது.
ரகாசா சூறாவளியின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஹாங்காங் மற்றும் மக்காவோவில் உள்ள அனைத்து மலேசிய குடிமக்களுக்கும் மலேசிய துணைத் தூதரகம் தற்போது பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
T8 அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பமண்டல சூறாவளி சமிக்ஞைகளின் போது மலேசியர்கள் உடனடியாக பாதுகாப்பான உட்புற தங்குமிடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும்,குடிமக்கள் கடலோரப் பகுதிகளை முற்றிலுமாகத் தவிர்த்து போதுமான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களையும் சேமித்து வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.