ஷாங்காய்,ஆசியாவில் பல ஆண்டுகளில் இல்லாத வகையில் வலிமையான புயல்களில் ஒன்றாக ரகசா புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. தைவான் மற்றும் பிலிப்பைன்சில் பேரழிவை ஏற்படுத்தி சென்றது. தைவானில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சாலைகள் முழுவதும் சூழ்ந்து காணப்பட்டது. வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. தைவானில் 17 பேர் பலியாகி உள்ளனர். 124 பேரை காணவில்லை. ஆயிரம் பேர் வசிக்க கூடிய தமா கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதேபோன்று பிலிப்பைன்சின் வடக்கே 10 பேர் பலியானார்கள்.
இதன்பின்னர் சீனாவின் தெற்கு கடலோர பகுதியை நோக்கி புயல் சென்றது. ஹாங்காங்கையும் தாக்கியது. சீனாவில் பலத்த காற்று வீசியதில், மரங்கள் முறிந்தன. கட்டிடங்கள் சேதமடைந்தன. தொடர் மழையால், குவாங்சி கவுன்டி பகுதியில் சில இடங்களில் இன்று ரெயில் சேவை பாதிக்கப்படும். நிவாரண பணிகளுக்காக, கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான நிதியை சீனா ஒதுக்கி உள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 20 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த புயலால், மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இது 230 கி.மீ. வரை வேகமெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கார்கள், பைக்குகள் தூக்கி வீசப்பட்டன. அவை ஒன்றன் மீது ஒன்றாக கிடந்தன. சீனாவின் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில், பள்ளிகள், தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் தொடக்கத்தில் மூடப்பட்டு இருந்தன. எனினும், புயல் கரையை கடக்கும் பகுதியில் இருந்து சற்று தொலைவில் அமைந்த பகுதிகளில் பணிகள் செயல்பட தொடங்கியுள்ளன.
ஹாங்காங்கில் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஹாங்காங்கில் உச்சபட்ச புயல் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இன்று காலை வரை புயலின் தாக்கம் இருந்தது.
ஹாங்காங்கில் கடல் அலைகள் கடுமையாக உயரே எழுந்தன. ஹாங்காங்கின் சர்வதேச விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எனினும், 36 மணிநேர இடைவெளிக்கு பின்னர், சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை இன்று வழக்கம்போல் செயல்பட தொடங்கின.