44.96 கிராம் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், 2011 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 2015 இல் மரண தண்டனைக்கு ஆளான 39 வயதான மலேசியர் கே. தட்சினாமூர்த்திக்கு இன்று (25) மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என சிங்கப்பூர் வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் எம். ரவி தெரிவித்துள்ளார்.
“குடும்பத்தினருக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு உடலைப் பெற்று செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகக் கொடூரமானதும் மனிதாபிமானமற்ற தண்டனையாகும்” என அவர் பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
முதலில் இன்று காலை நிறைவேற்றப்படவிருந்த தண்டனை, நள்ளிரவுக்குப் பிறகு தாமதப்படுத்தப்பட்டதாகவும், ஆனால் காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது என Lawyers for Liberty’s அமைப்பின் என். சுரேந்திரன் தெரிவித்துள்ளார்:
தட்சினாமூர்த்தியின் குடும்பம், தண்டனை நிறைவேற்றத்தைத் தடுக்க சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவசரமாக மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கான தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை என அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், “முதலில் நிறைவேற்றம் தாமதப்படுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் நடத்தப்படுவதாக அறிவித்தது கொடூரமானதும் நாகரிகமற்றதுமான செயலாகும். இது சீரற்ற முறையில் மரண தண்டனையை நிறைவேற்றுவதாகவே கருதப்படுகிறது” என அவர் விமர்சித்தார்.
கே. தட்சினாமூர்த்தி 2022 இலும் மரண தண்டனைக்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் சிங்கப்பூர் அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு காரணமாக அந்த நேரத்தில் நிறைவேற்றம் தடுக்கப்பட்டது.
அவர் உட்பட நான்கு மலேசியர்கள் சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு ஆளாகியுள்ள நிலையில், மலேசிய மனித உரிமை ஆணையம், மலேசிய அரசை தலையிடுமாறு முன்பே கேட்டுக்கொண்டது. மற்றவர்கள் பி. பண்ணீர் செல்வம், எஸ். சாமிநாதன் மற்றும் ஆர். லிங்கேஸ்வரன் ஆவர்.