கோலாலம்பூர்:
நாட்டில் சிறார்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்றும், சிலர் 10 வயதிலேயே அதாவது தொடக்கப் பள்ளி பருவத்திலேயே போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபடத் தொடங்குகிறார்கள் என்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி எச்சரித்தார்.
போதைப்பொருள் கலந்த மிட்டாய்களை இலவசமாக வழங்கும் வியாபாரிகளின் தந்திரங்களும் இதற்குக் காரணமாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த பிரச்சினையைத் தடுப்பதற்காக கல்வி அமைச்சு மற்றும் பாலர் பள்ளி அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், இதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மட்டுமல்ல, சமூகமும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
போதைப்பொருள் தடுப்பு, மறுவாழ்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு நிறுவனம் போன்ற அமலாக்க அமைப்புகள் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் மற்றும் போக்குவரத்தைத் தடுப்பதில் மேலும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“சில நேரங்களில் நாம் இணையத்தில் ஆர்டர் செய்த பொட்டலங்களில் கூட போதைப்பொருள் இருக்கும். இந்த விற்பனையாளர்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்படுகிறார்கள். அதனால், அமலாக்க மற்றும் மறுவாழ்வு அமைப்புகள் அவர்களை விட இன்னும் அதிக ஆற்றலுடன் செயல்பட வேண்டும்,” என அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், மலேசியாவில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் என்பது இனங்கள் கடந்த பிரச்சினையாகும் என்றும், கிளந்தான், திரெங்கானு, பெர்லிஸ் மற்றும் கெடா மாநிலங்களில் அதிக விகிதத்தில் பதிவாகி வருவதாகவும் ஜாஹிட் குறிப்பிட்டார்.
“இந்த குற்றச் செயலின் வியாபாரத் தொடர் ஒரே மலேசிய கோட்பாட்டைக் கொண்டுள்ளது. இதில் பெரிய அளவிலான விநியோகஸ்தர்கள் சீனர்கள், முறைபடுத்தப்பட்ட விநியோகஸ்தர்கள் இந்தியர்கள், சில்லறை விற்பனையாளர்கள் மலாய்காரர்கள் ஆகியோராக உள்ளனர்,” என்றும் அவர் விளக்கமளித்தார்.