புக்கிட் காஜாங் சுங்கச்சாவடியில் நேற்று நடந்த விபத்தில் தொடர்புடைய லோரி ஓட்டுநர், கனரக வாகனத்திலிருந்து குதித்ததாக ஒப்புக்கொண்டார், ஆனால் பிரேக்குகள் செயலிழந்ததால் தான் அவ்வாறு செய்ததாகக் கூறினார். விசாரணையின் போது 42 வயதான நபர் இதனை ஒப்புக்கொண்டதாக காஜாங் காவல்துறைத் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்தார் என்று பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டிருந்தது.
விசாரணைகளில் உதவுவதற்காக லோரி ஓட்டுநர் இரண்டு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார். காவலில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுநரை தவிர, லோரியின் உரிமையாளரான அவரது முதலாளி உட்பட ஐந்து நபர்களிடமிருந்து போலீசார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர் என்று அவர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது. லோரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஏப்ரல் மாதம் வாகனம் பராமரிப்புக்கு உட்படுத்தப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன. விபத்து உண்மையில் பிரேக் செயலிழப்பால் ஏற்பட்டதா அல்லது வேறு காரணிகளால் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன என்று அவர் கூறினார்.
நேற்று லோரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக நபருக்கு போதைப்பொருள், கிரிமினல் குற்றங்கள் தொடர்பான மூன்று வழக்குகள், 2013 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக நான்கு சம்மன்கள் அனுப்பப்பட்டதாக நாஸ்ரோன் கூறியிருந்தார்.
அந்த நபரின் சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் மற்றும் மது அருந்தியதற்கான எதிர்மறையான முடிவு வந்ததாகவும், மரணத்தை ஏற்படுத்திய கவனக்குறைவாக அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இரண்டு SUVகள், ஒரு கார் சம்பந்தப்பட்ட இந்த சம்பவத்தில், ஒரு வயது குழந்தையின் உயிர் பறிக்கப்பட்டது. அதே SUVயின் கீழ் சிக்கிய ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காயமடைந்த மீதமுள்ள ஏழு பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.