சென்னை,கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த 27 தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரைக்கு வருகை தந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் தற்போது வரை 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 18 பெண்கள், 13 ஆண்கள், 5 ஆண் குழந்தைகள், ஐந்து பெண் குழந்தைகள் என மொத்தம் 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 110 நபர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 51 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 60 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சூழலில் இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்பட தவெக நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது. பரப்புரைக் கூட்டம் நடைபெற்ற இடம், கரூர் அரசு மருத்துவமனை, உயிரிழந்தவர்களின் வீடுகள் ஆகியவற்றுக்குச் சென்று அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தியுள்ளார்.
அதேநேரத்தில், சி.பி.ஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி சென்னை ஐகோர்ட்டில் தவெக தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. விஜய் பிரசாரம் செய்ய தடை விதிக்குமாறு கோரியும் ஒரு தரப்பு கோர்ட்டை நாடியுள்ளது.
இந்நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:-
என் வாழ்க்கையில் இப்படி ஒரு வலி மிகுந்த நேரத்தை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. மனது முழுக்க வலி.. மனசு முழுக்க வலி.. வலி மட்டும்தான் இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்..
மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துட்டு இருக்காங்க. சி.எம். சார்… பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.. தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன் அல்லது ஆபீசில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.
இனி மக்கள் பாதுகாப்பே முக்கியம். இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம். எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும். என்னுடைய வலிகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், மற்ற கட்சி தலைவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் நின்று பேசிவிட்டு வந்ததை தாண்டி நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால், கட்சி நிர்வாகிகள் மீதும் சோஷியல் மீடியா நண்பர்கள் மீதும் எப்.ஐ.ஆர். (FIR) போட்டு பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். 5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன். கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது?
மக்கள் உண்மையை சொல்லும்போது கடவுளே வந்து எனக்கு சொல்வதுபோல் இருந்தது. சீக்கிரம் அனைத்து உண்மைகளும் வெளிவரும். பதற்றமான சூழலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை. அத்தனை பேர் இறந்து கிடக்கும் போது எப்படி விட்டுட்டு போக முடியும்?.. அப்படி நான் அங்க போனா அதை காரணம் காட்டி, வேறு சில அசம்பாவிதங்கள் நடக்கக் கூடாது என்பதற்காக கரூர் செல்லவில்லை. சூழலை புரிந்து கொண்டு எங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி.
நடக்கக்கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன்தான். என்னால் எப்படி அந்த ஊரை விட்டு வர முடியும்?.. பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன்.
இவ்வாறு அதில் விஜய் தெரிவித்துள்ளார்.