ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநில குடிநுழைவு துறை அதிகாரிகள் நேற்று நடத்திய அதிரடி சோதனையில், சட்டபூர்வ அனுமதியின்றி வேலை செய்ததாக 9 வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை மற்றும் மின்சாதனக் கடையில் ஆகியவற்றில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை செய்துவந்ததாக ரகசிய தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில்மாநில குடிநுழைவு அமலாக்க அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், 22 முதல் 62 வயதுக்குட்பட்ட பங்களாதேஷைச் சேர்ந்த ஒருவர், இந்தோனேஷியாவைச் சேர்ந்த ஒருவர், பாக்கிஸ்தானைச் சேர்ந்த 2 பேர், இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் மற்றும் மியன்மாரைச் சேர்ந்த ஒருவர் உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆரம்ப விசாரணையில், அவர்கள் மோட்டார் சைக்கிள் மெக்கானிக், மின்சாதனக் கடை விற்பனையாளர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
கைதுசெய்யப்பட்ட அனைவரும் தற்போது செத்தியா ட்ரோபிகா குடிநுழைவு துறை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குடிவரவு சட்டம் 1959/63ன் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், விசாரணைக்கு உதவுவதற்காக ஒரு சாட்சிக்கு பிரிவு 29ன் கீழ் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
“அனுமதியில்லாத வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு எதிராக எந்தவித சமரசமும் இல்லை. மடானி அரசின் நோக்கத்தின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என ஜோகூர் குடிநுழைவு துறை இயக்குநர் டத்தோ முஹமட் ருஸ்தி முஹமட் தருஸ் எச்சரித்தார்.