வாஷிங்டன்:
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி ஆட்சியில் செயல்பட்டு வருகிறது. அரசின் செலவீனங்களுக்கு நிதி ஒதுக்கும் புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறாததால், அமெரிக்க அரச நிர்வாகம் மீண்டும் முடங்கியுள்ளது.
டிரம்ப் அரசு கொண்டு வந்த புதிய சட்டமூலத்தில் பழைய திட்டங்களை தவிர்த்து, புதிய திட்டங்களுக்கு மட்டும் நிதி வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.
சட்டமூலத்தை நிறைவேற்ற குடியரசுக் கட்சிக்கு ஜனநாயகக் கட்சியினரின் குறைந்தது எட்டு வாக்குகள் அவசியமாக இருந்தது. ஆனால், ஜனநாயகக் கட்சி அதற்கு நிபந்தனைகளை விதித்தது. குறிப்பாக, டிரம்ப் சுகாதாரத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டு சலுகைகளை தொடர வேண்டும் என வலியுறுத்தியது. இதனை டிரம்ப் நிராகரித்ததால் சட்டமூலம் தோல்வியடைந்தது.
இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 55% வாக்குகளும், எதிராக 45% வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன. ஆனால், நிறைவேற 60% வாக்குகள் தேவைப்படுவதால் அது நிறைவேறவில்லை.
இதன் விளைவாக, அக்டோபர் 1 புதன்கிழமை நள்ளிரவு 12.01 மணி முதல் அமெரிக்காவில் அத்தியாவசியமற்ற அனைத்து அரச சேவைகளும் நிறுத்தப்பட்டன.
விமான போக்குவரத்து, சிறு வணிக கடன் அலுவலகங்கள் போன்றவை பாதிக்கப்படுகின்றன. அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் மட்டும் தொடர்ந்தும் பணியாற்றுவார்கள்; மற்ற அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகின்றனர்.
அமெரிக்காவில் சுமார் 7.5 இலட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ஒரு நாளுக்கு சுமார் ரூ.3,300 கோடி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2018-க்கு பிறகு இம்முறை மீண்டும் அமெரிக்க அரசு முடங்கியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இது 11வது தடவையாகும். மற்ற நாடுகளில் போர் மற்றும் அரசியலமைப்பு நெருக்கடிகளின் போதும் அரசு செயல்பட்டுக்கொண்டே இருக்கும் நிலையில், அமெரிக்க அரசியல் அமைப்பின் தனித்துவத்தால் இவ்வாறான முடக்கம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.