கோலாலம்பூர்:
இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு சேர்க்கும் Global Sumud Flotilla (GSF) அனைத்துலக மனிதநேய உதவிக்கான தன்னார்வார்கள் குழுவிலுள்ள மலேசியர்களை உடனடியாக விடுவிக்காவிட்டால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மலேசிய வருகை அழைப்பை ரத்து செய்யுமாறு அரசாங்கத்தை அம்னோ இளைஞர் அணி வலியுறுத்தியுள்ளது.
“மலேசிய தன்னார்வலர்கள் விடுவிக்கப்படாவிட்டால், அரசாங்கம் டிரம்பின் அழைப்பை மீளப் பெற வேண்டும். இல்லையெனில், டிரம்பின் கோலாலம்பூர் வருகையின் போது நாடு முழுவதும் உள்ள அம்னோ இளைஞர்கள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்,” என்று, அம்னோ இளைஞர் அணி தலைவர் டாக்டர் அக்மல் சாலே தனது பேஸ்புக் பதிவில் எச்சரித்தார்.
அவர் மேலும், “எங்கள் தன்னார்வலர்களை காயப்படுத்துவது, அனைத்து மலேசியர்களையும் காயப்படுத்துவதைப் போன்றதே. எனவே Flotilla ஆர்வலர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்,” என்றார்.
இதேவேளை, தன்னார்வலர்களின் விடுதலைக்காக இராஜதந்திர முயற்சிகளில் அரசு அமைப்புக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தற்போது 12 மலேசியர்கள் இஸ்ரேலிய காவலில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மலேசியா அனைத்துலக பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும், முன்னேற்றம் குறித்த வழக்கமான புதுப்பிப்புகளை வழங்குவதாகவும் அன்வார் உறுதியளித்தார்.