Offline
Menu
காசாவில் இருக்கும் அனைவருமே தீவிரவாதிகளாக கருதப்படுவார்கள்..” சர்ச்சை அறிவிப்பை வெளியிட்ட இஸ்ரேல்
By Administrator
Published on 10/03/2025 09:00
News

டெல் அவிவ்:

மத்தியக் கிழக்கில் இஸ்ரேல் ஹமாஸ் போர் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. ஹமாஸை முழுமையாக அழிப்போம் எனச் சொல்லி இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையே காசாவில் இருந்து மக்கள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும் காசாவில் உள்ளவர்கள் அனைவரும் தீவிரவாதிகளாகவே கருதப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியக் கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே போர் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான மோதலால் காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இஸ்ரேல் தாக்குதலில் பெரும்பாலான ஹமாஸ் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். இதனால் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றே சர்வதேச நாடுகள் வலியுறுத்துகின்றன.

இருப்பினும், அதை ஏற்க மறுக்கும் இஸ்ரேல் ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் தொடரும் எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் காசாவில் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே காசாவில் இருக்கும் பொதுமக்களுக்கு இஸ்ரேல் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது காசாவில் இருக்கும் மக்கள் வெளியேற வேண்டும் என்றும் காசாவில் இருக்கும் அனைவரும் தீவிரவாதிகளாகவே கருதப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசா போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தான் 20 அம்ச திட்டத்தை வெளியிட்டிருந்தார். இந்தத் திட்டம் குறித்து முடிவெடுக்க ஹமாஸுக்கு 4 நாட்கள் காலவகாசமும் கொடுத்திருந்தார். இதனை ஹமாஸ் ஆராய்ந்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் காசா நகரத்தை முழுமையாகச் சுற்றி வளைத்து வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.. இது தொடர்பாக அவர் மேலும், “காசா நகரத்தில் உள்ள ஹமாஸ் போராளிகளைத் தனிமைப்படுத்துகிறோம். எனவே, பாதுகாப்பாகத் தெற்குப் பகுதிக்குச் செல்ல விரும்பும் மக்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. இதையும் தாண்டி காசாவில் தங்குபவர்கள் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத ஆதரவாளர்களாகக் கருதப்படுவார்கள்” என்றும் அவர் எச்சரித்தார்.

மத்திய காசாவை மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் நெட்சாரிம் வழித்தடத்தை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும் இதன் மூலம் காசாவின் வடக்குப் பகுதி, தெற்குப் பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் காட்ஸ் தெரிவித்தார். காசாவில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் மக்கள் இஸ்ரேல் ராணுவச் சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்லலாம் என்றும் அவர்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Comments