அரபிக் கடலில் ஒரு புதிய துறைமுகத்தைக் கட்டவும் வர்த்தக திட்டங்களை செயல்படுத்தவும் பாகிஸ்தான் அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கனிம வளங்களை பூமியில் இருந்து வெட்டி எடுத்து தனது பொருளாதாரத்தை மேம்படுத்த பாகிஸ்தான் திட்டமிட்டு வருகிறது.
அண்மையில் அமெரிக்கா வெள்ளை மாளிகையில் டிரம்ப்-ஐ சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி அசிம் முனீர் அவருக்கு தங்கள் நாட்டின் அங்கமான பலுசிஸ்த்தான் பிரதேசத்தின் கனிம மாதிரிகளை காட்டிய புகைப்படங்கள் வைரலானது. மேலும் அந்தச் சந்திப்பில், ஷெரீப் அமெரிக்க நிறுவனங்களிடம் வேளாண்மை, தொழில்நுட்பம், சுரங்கம் மற்றும் எரிசக்தி துறைகளில் முதலீடு செய்யக் கோரியிருந்தனர்.
இந்நிலையில் பலுசிஸ்தான் பகுதியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை உலகச் சந்தைக்குக் கொண்டு செல்ல ஒரு ஏற்றுமதி முனையமாக பாஸ்னி நகரில் புதிய துறைமுகம் கட்ட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்தத் துறைமுகத்தைக் கட்டவும் இயக்கவும் பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது வர்த்தக நோக்கங்ககுக்காக மட்டுமே என்றும் இந்த துறைமுகம் அமெரிக்க ராணுவ தளமாக இருக்காது என்றும் பாகிஸ்தான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டு வருகிறது.
பலுசிஸ்தான் பிரிவினைவாதிகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் நடைமுறை சாத்தியம் கேள்விக்குறியாகவே உள்ளது.