பாலக்காடு,கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பல்லசனா பகுதியை சேர்ந்தவள் வினோதினி (வயது 9). இவள் விளையாடி கொண்டிருந்த போது வலது கையில் படுகாயம் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே அவள் பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிறுமிக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.
உடனே டாக்டர்கள் கையில் மாவுக்கட்டு போட்டு உள்ளனர். அதன் பின்னர் சிறுமியின் கையில் வீக்கம் ஏற்பட்டதோடு, நீர் கட்டி உள்ளது. இதனால் சிறுமி வலி தாங்க முடியாமல் துடித்தாள். இதையடுத்து டாக்டர்கள் சிறுமியின் வலது கையை (முழங்கை வரை) வெட்டி அகற்றி உள்ளதாக தெரிகிறது.
டாக்டர்களின் தவறான சிகிச்சையால் சிறுமியின் கை அகற்றப்பட்டதாக குடும்பத்தினர், உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார். விசாரணை குழுவில் டாக்டர்கள் பத்மநாபன், காவ்யா ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். மேலும் மேல் சிகிச்சைக்காக சிறுமி கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.