Offline
Menu
தனுஷ் படத்துக்கு எதிராக ரூ.84 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு
By Administrator
Published on 01/21/2026 12:00
Entertainment

இந்தி திரைப்பட இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்து 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ராஞ்சனா’. இதை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து தனது யெல்லோ மீடியா சார்பில் தயாரித்திருந்தார், ஆனந்த் எல்.ராய்.

இதன் தொடர்ச்சியாக தனுஷ், கீர்த்தி சனோன் நடிப்பில் ‘தேரே இஸ்க் மே’ என்ற படத்தை இயக்கிய அவர், கடந்த ஆண்டு இப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில் ஆனந்த் எல். ராய் மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனம் மீது ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் ரூ.84 கோடி இழப்பீடு கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

அம்மனுவில், ‘ராஞ்சனா’ படத்தின் கதை, கதாபாத்திரங்கள் ‘தேரே இஷ்க் மே’ படத்தில் காப்பியடிக்கப்பட்டுள்ளன. ‘ராஞ்சனா’வின் வர்த்தக முத்திரை தலைப்பு, டேக்லைன் மற்றும் காட்சி கூறுகளுடன் வேண்டுமென்றே அப்படத்தின் நல்லெண்ணத்தைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

அந்தப் படத்தின் விளம்பரங்கள், டிரெய்லர் மற்றும் புரமோஷனில் எந்த அனுமதியும் இல்லாமல் ‘ராஞ்சனா’ படம் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.84 கோடி இழப்பீடு தர வேண்டும்” என்று கூறியுள்ளது. இதற்கு ஆதாரமாகப் படத்தின் போஸ்டர், டீஸர், நேர்காணல் கிளிப்ஸ்களை ஈராஸ் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. இவ்வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

Comments