Offline
Menu
மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை புகைப்படத்துடன் அறிவித்த இயக்குநர் அட்லி
By Administrator
Published on 01/21/2026 12:00
Entertainment

சென்னை,தமிழ் திரையுலகில் இருந்து இன்று ஆங்கில திரையுலகம் வரை சென்று கொண்டிருக்கும் முன்னணி இயக்குநர் அட்லீ. ஷங்கரின் உதவி இயக்குநராக அறிமுகமாகி, இன்று பல ஹிட் படங்களை இயக்கி வருகிறார். ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே வெற்றி பெற்றார். தனது இரண்டாவது படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி அமைத்தார். 2016-ம் ஆண்டு வெளியான ‘தெறி’ படம் ஹிட் படமாக அமைந்தது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசை அமைத்திருந்தார். இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே ‘மெர்சல்’ திரைப்படத்தை இயக்கினார் அட்லீ. இதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு ‘பிகில்’ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி பாலிவுட்டுக்கும் என்ட்ரி கொடுத்தார். இத்திரைப்படம் சுமார் ரூ.1,200 கோடி வசூல் செய்தது.

நடிகை பிரியாவை காதலித்து வந்த அட்லீ கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்தத் தம்பதிகளுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. இயக்கம் மட்டுமன்றி தயாரிப்பிலும் அவரும், அவரது மனைவி பிரியாவும் கவனம் செலுத்தி வருகின்றனர். பிரியா அட்லீ இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குநர் அட்லி தன் மனைவி கருவுற்றிருக்கும் தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அட்லி தனது இன்ஸ்டா பதிவில் “எங்கள் புதிய உறுப்பினரின் வருகையால் எங்கள் வீடு இன்னும் இனிமையானதாக மாறப்போகிறது! ஆம்! நாங்கள் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறோம். உங்கள் அனைவரின் ஆசீர்வாதங்களும், அன்பும், பிரார்த்தனைகளும் தேவை. அன்புடன் அட்லீ, பிரியா, மீர், பெக்கி, யூகி, சோக்கி, காபி மற்றும் கூபி” என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Comments