Offline
Menu
ஏ.ஆர். ரகுமானுக்கு ஆதரவாக களமிறங்கிய சின்மயி!
By Administrator
Published on 01/21/2026 12:00
Entertainment

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், “கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. சினிமாத்துறை சமூகம் சார்பானதாக மாறி விட்டது. திரைத்துறையில் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்களே, அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியுடன் இருக்கின்றனர். இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கலாம்,” என்று தெரிவித்தார்.

ஏ.ஆர்.ரகுமானின் இந்த கருத்துக்கு பலரும் எதிர் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அந்தவகையில் இந்தி தொலைக்காட்சி ஒன்றின் விஜே ஸ்வாதி சதுர்வேதி ஏ.ஆர். ரஹ்மான் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில்,

“இசை மேதை ஏ.ஆர். ரஹ்மானின் இந்தக் கருத்தால் நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இது, நான் ஒருமுறை அவருடன் நடத்திய ஒரு தொலைக்காட்சி நேர்காணலை எனக்கு நினைவூட்டுகிறது. அந்த நேர்காணலில் அவரின் சிறந்த படைப்பான “மா துஜே சலாம்” (வந்தே மாதரம்) பாடலை பாடுமாறு அல்லது முணுமுணுக்குமாறு நான் அவரிடம் கெஞ்சிக் கொண்டே இருந்தேன். ஆனால் அந்த அரை மணி நேரம் முழுவதும் அவர் உறுதியாக மறுத்துவிட்டார். கலைஞர்கள் பொதுவாகத் தங்களின் மிகப்பெரிய வெற்றிப் பாடல்களைப் பாடுவதில் இவ்வளவு பிடிவாதம் காட்ட மாட்டார்கள் என்பதால் நான் அப்போது வருத்தமடைந்தேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,

நவம்பர் 23, 2025 அன்று புனேயில் நடந்த ஆர்.கே. லக்ஷ்மன் நினைவு விருது விழாவில், ஏ.ஆர். ரஹ்மானும் நாங்களும், எங்களுடன் சேர்ந்து முழக்கமிட்ட ஒரு கூட்டத்தின் முன் வந்தே மாதரம் பாடினோம். அவர் கிட்டத்தட்ட ஒவ்வொரு இசை நிகழ்ச்சியிலும் ‘மா துஜே சலாம்’ பாடுகிறார். அவரது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் இது தெரியும்.

ஒருவேளை, நீங்கள் அவரைப் பேட்டி கண்டபோது, அவருடைய குரல் சரியில்லாமல் இருப்பதாக அவர் உணர்ந்திருக்கலாம் அல்லது அந்த நாளில் அவருக்குப் பாடத் தோன்றாமல் இருந்திருக்கலாம். அதில் தவறொன்றுமில்லை. இந்த ட்வீட்டிற்கு கீழே வரக்கூடிய பதில்கள், சமீபகாலமாக என்னவெல்லாம் தவறாகப் போய்க் கொண்டிருக்கின்றன என்பதைத் துல்லியமாகக் காட்டுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments